ஒலிம்பிக் தோன்றிய வரலாறு
உலகின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி, 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது என்றால் நம்ப முடிகிறதா?
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்நாள் கனவு. 200க்கும் மேற்பட்ட நாடுகள், ஆயிரக்கணக்கான வீரர்கள் என உலக நாடுகளை ஒரு குடையின் கீழ் இணைக்கும் ஒலிம்பிக் போட்டி தோன்றியது கி.மு.776ல்.
ஐரோப்பியாவில் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக விளங்கியது பண்டைய கிரேக்கப் பேரரசு. அங்கு வாழ்ந்த மக்கள் சமயங்களையும் அது சார்ந்த சடங்குகளையும் பின்பற்றும் வழக்கம் கொண்டவர்களாக இருந்தனர். கிரேக்க கடவுள்களின் கடவுளாக கருதப்படும் ‘ஜீயஸ்’ பெருமையை பறைசாற்றும் விழாவாக தொடங்கியது தான் ஒலிம்பிக் போட்டி.
கிறிஸ்து பிறப்பதற்கு 776 ஆண்டுகளுக்கு முன்பு, ஒலிம்பியா என்ற இடத்தில் தொடங்கிய முதலாவது போட்டி, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டது. போருக்கு தயாராக உதவக்கூடிய ஓட்டப்பந்தயம், குத்துச்சண்டை, மல்யுத்தம், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் உள்ளிட்ட போட்டிகளே இடம்பெற்றன. இதில் வெற்றி வாகை சூடியவர்களுக்கு ஆலிவ் இலையால் ஆன கிரீடம் சூட்டப்பட்டது.
பண்டைய ஒலிம்பிக் போட்டியில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். பெண்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதோடு, போட்டியைக் காணவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
கிரேக்கர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த ஒலிம்பிக் போட்டி கிபி 3ம் நூற்றாண்டில் ரோமானியர்களின் படையெடுப்பால் பொலிவிழந்தது. ஆயிரத்து 169 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிக்கு தடை விதித்து உத்தரவிட்டார் இரண்டாம் தியோடோசியஸ் என்ற ரோமானிய அரசர். அதற்கு அவர் கூறிய காரணம் ”விளையாட்டு என்பது மதநம்பிக்கை அற்றவர்களின் கலாச்சாரம்” என்று.
தியோடோசியஸ் அதோடு நின்றுவிடாமல் ஒலிம்பிக் நடைபெற்ற மைதானங்களையும், ஜீயஸ் கடவுளின் கோயிலையும் இடித்து தரைமட்டமாக்கினார் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றாக உள்ளது.
உலகின் நினைவில் இருந்து ஒலிம்பிக்கிற்கு ஆயிரத்து 400 வருடங்களுக்கு பிறகு புத்துயிர் ஊட்டினார் பாரோன் பியரே டி கூபர்ட்டின். பிரான்ஸ் நாட்டு வரலாற்று ஆய்வாளரும், கல்வியாளருமான கூபர்ட்டின், தனது இடைவிடாத முயற்சியால் பல நாட்டு பிரதிநிதிகளை ஒன்று திரட்டி 1894-ம் ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கினார்.
நவீன ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கப்படும் கூபர்ட்டின், ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் நாட்டிலேயே முதலாவது ஒலிம்பிக்கை நடத்த முடிவு செய்தார். அதன்படி, 1896ஆம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி ஏதென்ஸ் நகரில், முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கியது.