Friday, June 4, 2021

Day 5 - Quiz Content Topic - Auroville

                                        


                                        ஆரோவில் (Auroville) என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்(யுனெஸ்கோ) உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நகரமாகும். புதுச்சேரிக்கு அருகில் 12 கி.மீ தொலைவில்அமைந்துள்ளது. இது தற்போது மத்திய அரசின் மேற்பார்வையில் உள்ளது. ஆரோவில் ஒரு சர்வதேச கூட்டுச்சமூக நகரமைப்பு.

            எல்லா நாடுகளையும் சேர்ந்த ஆண்களும், பெண்களும் மதக் கோட்பாடுகளையெல்லாம் அரசியல் ஈடுபாடுகளையெல்லாம் நாட்டுப்பற்றுகளையெல்லாம் தாண்டி அமைதி, மேலும் மேலும் சிறந்து வளரும் சமூகம் முதலியவற்றின் அடிப்படையில் வாழக்கூடிய ஒரு சர்வதேச நகரமாக இருக்க ஆரோவில் விரும்புகிறது. மனித குல ஒருமைப்பாட்டை உண்மையாக்குவதே ஆரோவில்லின் நோக்கமாகும்’ என்ற பிரகடனத்தோடு ஸ்ரீ அன்னையால் தோற்றுவிக்கப்பட்டது. 

                                    


 கட்டுமானம்:- 

                                       



1968-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் நாள் ஆரோவில் நகரத்தைக் கட்டும் புனிதப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் மையத்திலிருந்த பெரிய ஆலமரத்திலிருந்து சிறிது தொலைவில் ஒரு வட்ட வடிவமான மேடையில் தாமரை மொட்டு வடிவத்தில் சலவைக்கல்லாலான ஒரு தாழியில் உலகத்தின் 121 நாடுகளிலிருந்தும் இந்தியாவில் 25 மாநிலங்களிலிருந்தும் அந்தந்த இடத்திலிருந்து ஒரு பிடி மண் கொணரப்பெற்று அங்கு இடப்பெற்றது. இந்த உலக நகரில் சுமார் 50,000 பேர் வசிப்பதற்காகத் திட்டமிடப்பட்டு உருவாக்கம் பெற்று வருகிறது. நகரத்தின் மையத்தில் ஆரோவில்லின் ஆன்மாவாகிய மாத்ரி மந்திர் அமைந்துள்ளது. அதனைச்சுற்றி பூந்தோட்டங்கள் உள்ளன. இந்த மையப்பகுதிக்கு பேரமைதி (Peace) என்று பெயர். 

 சிறப்பம்சங்கள்:-

                        


         ஆரோவில் சமூகத்தில் 35க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் வசிக்கின்றார்கள். பன்னாட்டு மக்களிடையே நல்லிணக்கமாகவும் கலை, இலக்கிய, பண்பாட்டு நெறிமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஆன்மிகத்தின் அடிப்படையில் ஓருலகக் கருத்துணர்வை வளர்க்கும் வகையிலும் வளர்ந்து வரும் இந்நகரில் நான்கு மொழிக்கொள்கை நடைமுறையில் உள்ளது. முதல்மொழி தமிழ். அடுத்து பிரெஞ்ச், சமஸ்கிருதம், மற்றும் ஆங்கிலம் இங்கு பேச்சு மற்றும் எழுத்து மொழிகளாக விளங்குகின்றன. ‘ஆரோவில் டுடே’ என்னும் இதழ் (1988 ஆம் ஆண்டிலிருந்து) ஆங்கில மொழியில் வெளிவந்து கொண்டிருக்கிறது. வலைத்தளத்தின் மூலமாக ‘ஆரோவில் ரேடியோ’ இயக்கப்படுகிறது. முற்றிலும் வறண்ட பூமியான இதனைச் செழிப்பு மிகுந்த ஆன்மிக நகரமாக உருவாக்குவதற்கு 40 நாட்டு மக்கள் உள்ளூர் மக்களின் துணையோடு உழைத்து வந்திருக்கிறார்கள். மழைநீர் சேகரிப்பு, இயற்கை வேளாண்மை, மாற்றுச்சக்தி மற்றும் மறுஉற்பத்தி செய்ய வல்ல (சூரிய சக்திப் பலகங்கள்வழி) பொருள்களைக் குறைந்த விலையில் உற்பத்தி செய்து வழங்குதல், விதைகள் சேகரிப்பு, மர நாற்றுப் பண்ணைகள், ஆராய்ச்சிப் பணிகள் எனப் பலவற்றைச் செய்து வரும் ஆரோவில்லின் நோக்கம் மானுடம் மேம்படைதல் என்பதேயாகும். 8 மொழிகளில் 25,000 மேற்பட்ட நூல்கள் மற்றும் குறுந்தகடுகளைக் கொண்ட நூலகங்கள் இங்கு உள்ளன. இந்திய மற்றும் பிறநாட்டு மொழிகளைக் கற்பதற்கான மொழிக்கூடம் இங்கு உள்ளது. பாரத்நிவாஸ் வளாகத்தில் ஆரோவில் ஆவணப்பாதுகாப்பு மையமும் செயல்படுகின்றது. 40க்கு மேற்பட்ட விருந்தினர் இல்லங்கள், மாணவர், இளைஞர் விடுதிகள் இங்கு அமைந்துள்ளன. ஆய்விற்காகவும், ஆன்ம பரிசோதனைகளுக்காகவும் இங்கு ஆண்டுதோறும் ஆரோவில் சபைகளைச் சார்ந்த பன்னாட்டினர் வந்து தங்குகின்றனர். ஆயிரம்பேர் அமர்ந்துண்ணும் வகையில் இங்கு இயங்கும் சூரியசக்தி உணவகம் (சோலார் கிச்சன்) குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆரோவில் குழந்தைகளுக்கான 5 பள்ளிகள், 2 சிறார் பள்ளிகள், 2 முன் மழலையர் பள்ளிகள் இவற்றோடு ஆரோவில் பகுதியைச் சுற்றிலும் 16 பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராம இளைஞர்கள் தொழிற்கல்வி கற்றுக் கொள்வதற்கென ஒரு தொழிற்பள்ளியும், பணிமுடித்துத் திரும்பும் தொழிலாளர்களுக்கான இளைஞர்கள் கல்வி மையமும் இயங்கும். 

 உலக அரங்கில் ஆரோவில்:- 

     1968-இல் நடைபெற்ற ஆரோவில் தொடக்கவிழாவில் 124 நாடுகள் பங்கேற்று ஆரோவில் சாசனத்தை ஏற்றுக் கொண்டன. 1988-இல் இந்திய அரசு ஆரோவில் பவுண்டேஷன் சட்டத்தை நிறைவேற்றி, நிர்வாகப் பேரவை, பன்னாட்டு ஆலோசனைக் குழு, ஆரோவில்வாசிகள் அவை ஆகியவற்றை அமைத்தது. ஆரோவில் நகரத் திட்டத்திற்கு அங்கீகாரம் அளித்ததோடு நிதியுதவியும் வழங்கி வருகிறது.யுனெஸ்கோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகின் முக்கியத் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றின் நல்லுறவையும் அங்கீகாரத்தையும் ஆரோவில் பெற்றுள்ளது. 6 கண்டங்களில் உள்ள உலக அமைதிச் சின்னங்களின் வரிசையில் ஆசியாவிற்கான அமைதி மேசை ஆரோவில்லிற்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மேசையை ஐ.நா. சபை நட்புக்குழு சார்பில் நியூயார்க் நகரில் வழங்கப் பெற்றபோது ஆரோவில்லின் பிரதிநிதியாக தமிழ்க்கவிஞர் இரா.மீனாட்சி அதனைப் பெற்றுக்கொண்டார். 

 மாத்ரி மந்திரின் அமைப்பு :-

        மாகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாகாளி, மகேஸ்வரி ஆகிய பிரபஞ்ச அன்னையின் செயல் வடிவங்களை ஸ்ரீஅரவிந்தர் உணர்த்தும் வகையில் இம்மண்டபத்தை முறையே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் நான்கு தூண்கள் தாங்கி நிற்கின்றன. மாத்ரி மந்திர் சிறிது தட்டையான கோளவடிவிலான ஆலயமாகும். தரைமட்டத்திலிருந்து 29 மீ. உயரத்தில் உள்ள இக்கோளத்தின் விட்டம் 36 மீ. முக்கோண வடிவச் சட்டங்களால் ஆன இக்கோளத்தின் புறப்பகுதி, தங்க ரேக்குகள் பதிக்கப்பெற்ற வட்ட வடிவத் தட்டுகளால் அமைக்கப் பெற்றுக் காண்போரைக் கவர்கின்றது. கோளத்தின் உட்புற மேற்பகுதியில் ஒரு பெருங்கூடம் உள்ளது. அதன் விக்கிரகங்களோ, படங்களோ கிடையாது. பன்னிரு பக்கங்களைக் கொண்ட அந்த அறையின் தளப்பகுதியும் சுவர்களும், வெண் சலவைக் கற்களால் ஆனவை. பன்னிரு தூண்களைக் கொண்ட அந்த அறையில் சன்னல்கள் இல்லை. நுழையவும், வெளியேறவும் கூடிய வகையில் இரு வாசல்கள் உண்டு. அறையின் மையத்தில் ஸ்ரீஅன்னையின் சின்னமும், அதன் நடுவில் நான்கு புறமும் ஸ்ரீஅரவிந்தரின் சின்னங்கள் பொருத்தப் பெற்ற பொன்முலாம் பூசிய மேடையின்மீது உருண்டை வடிவிலான ஒளி ஊடுருவக்கூடிய படிகம் ஒன்று அமைக்கப் பெற்றுள்ளது. அதன் நேர் மேற்கூரையிலுள்ள ஆடியின் வழியாகச் சூரிய ஒளிக்கீற்றுகள் உள் புகுந்து படிகத்துள் பிரதிபலிக்கும் அழகு நேரில் தரிசித்து அனுபவிக்கத்தக்கது. சூரிய ஆற்றலை மின்கலங்களில் சேகரித்து வைத்துச் சூரிய ஒளி இல்லாத பொழுதுகளில் அப்படிகத்தின் மீது செலுத்தப் பெறும். இப்படிகம் உலகிலேயே மிகப்பெரிய செயற்கைப் படிகமாகும்.

                                        


No comments:

Post a Comment

Sci quiz

Science Lesson - 1 ...