Tuesday, June 8, 2021

DAY 9 - QUIZ CONTENT - விமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள்

 விமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள் (வரலாற்று நாயகர்கள்)

        கிறிஸ்துவுக்குப் பின் நாம் இருபது நூற்றாண்டுகளை கடந்துவிட்டோம் அவற்றில் இருபதாம் நூற்றாண்டில்தான் அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அதனால்தான் இருபதாம் நூற்றாண்டை 'அறிவியல் நூற்றாண்டு' என்று பதிந்து வைத்திருக்கிறது வரலாறு. மனித வாழ்க்கையை மேம்படுத்திய ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளை கடந்த நூற்றாண்டில் உலகம் சந்தித்தது. அவற்றுள் இரண்டு கண்டுபிடிப்புகள் இந்த உலகையே ஒரு குக்கிராமமாக சுருக்க உதவின. ஒன்று அலெக்ஸாண்டர் கிரகம்பெல் கண்டுபிடித்த தொலைபேசி, மற்றொன்று:

     பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்”  ஆம் உண்மையிலேயே பறவைகள் பறக்கும் அழகைக் கண்டு வியந்து நாமும் அவற்றைப்போல் பறந்தால் நன்றாக இருக்குமே!! ஏன் மனிதனும் பறக்க முடியாது? என்று கேள்வி கேட்டு பல ஆண்டு காலம் உறுதியோடு உழைத்து தங்கள் உயிரையும் பணயம் வைத்து கடைசியில் தங்கள் கனவை நனவாக்கிய இரண்டு வரலாற்று நாயகர்களின் கதையைத் தெரிந்துகொள்வோம்...


        மனுகுலத்திற்கு பறக்கும் சக்தியைக் கொடுத்த அந்த அபூர்வ சகோதரர்கள் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட்.இவர்களை சுருக்கமாக ரைட் சகோதரர்கள் என்று அழைக்கிறது வரலாறு. அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் மெல்வில் எனும் ஊரில் 1867 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி பிறந்தார் வில்பர் ரைட், நான்கு ஆண்டுகள் கழித்து 1871 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 9ந்தேதி பிறந்தார் இளையவர் ஆர்வில் ரைட் இவர்களது தந்தை மில்டன் ரைட் ஒரு பாதிரியார். குடும்பம் ஏழ்மையான குடும்பம்தான் அதனால் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியவில்லை ரைட் சகோதரர்களால் ஆனால் இருவருக்குமே அறிவுத்திறனும், ஆற்றலும் நிறையவே இருந்தது. ஒருமுறை இருவருக்கும் பறக்கும் விளையாட்டுப் பொம்மை ஒன்றை பரிசாகத் தந்தார் தந்தை. மூங்கில் தக்கை, காகித அட்டை ஆகியவற்றால் செய்யப்பட்ட அந்த பொம்மை வீட்டின் கூரைவரை ஒரு ஹெலிகாப்டரைப்போல் பறந்து செல்லக்கூடியதாக இருந்தது. அப்போதே ரைட் சகோதர்கள் இருவருக்கும் அந்தப் பொம்மையை பெரிய அளவில் செய்தால் அதனை வெளியில் இன்னும் அதிக உயரத்தில் பறக்க விடலாமே என்ற எண்ணம் உதித்தது. முயன்று பார்த்தனர் தோல்வியைத் தழுவினர்.

         ரைட் சகோதரர்கள் இருவருக்குமே பறவைகள் பறக்கும் அழகைப் பார்த்து வியப்பதில் அலாதி பிரியம். அதே நேரத்தில் பலவிதமான பட்டங்களை செய்து பறக்க விட்டு மகிழ்வார்கள். அந்தப் பட்டங்களைப்போல், பறவைகளைப்போல் என்றாவது ஒருநாள் நாமும் வானத்தில் பறப்போம் என்ற நம்பிக்கையைச் சுமந்துகொண்டு பிழைப்புக்கு வழி தேடினர் இருவரும். ஒரு அச்சு நிறுவனத்தை தொடங்கி செய்தித்தாள்கள் அச்சிட்டனர் ஆனால் அது நொடித்துப்போனது. பின்னர் அப்போது சைக்கிள்கள் பிரபலமாக தொடங்கியிருந்ததால் அவர்கள் சைக்கிள் வியாபாரத்தில் ஈடுபட்டனர். அந்தச் சமயத்தில்தான்  Otto Lilienthal  என்ற ஜெர்மானியரைப் பற்றி கேள்விப்பட்டனர் இருவரும். தங்களுக்கு முன்பே பறப்பதைப்பற்றி சிலர் சிந்தித்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது. Otto தான் தயாரித்த கிளைடர் என்ற கருவியின் மூலம் இயந்திரம் எதுவுமின்றி காற்றின் சக்தியினால் ஆகாயத்தில் பறந்ததைப்பற்றி ரைட் சகோதரர்கள் கேள்விப்பட்டனர்.


            பறக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை மேலும் வளர்ந்தது. அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள முற்பட்டபோது Otto Lilienthal ஒரு பறக்கும் சோதனை முயற்சியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ரைட் சகோதரர்கள் அதிர்ந்து போனாலும் அவர்களது நம்பிக்கை உதிர்ந்து போகவில்லை.  Smithsonian Institution என்ற அமைப்பின் தலைவருக்கு அவர்கள் கடிதம் எழுதினர். ரைட் சகோதரர்களின் ஆர்வத்தை உணர்ந்த கழகத்தின் தலைவர் Samuel P. Langley ஆகாயத்தில் பறக்க அதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றியும், வெற்றி தோல்விகளைப் பற்றியும், முன்னேற்றம் பற்றியும் இப்படி எல்லாத் தகவல்களையும் அனுப்பி வைத்தார்.ரைட் சகோதரர்கள் தங்களுக்கு முன் பலர் மேற்கொண்ட அரிய முயற்சிகளைக் கண்டு அவர்கள் மலைத்தனர். அந்த முயற்சிகளால் பெறப்பட்ட அறிவைக்கொண்டு வெவ்வேறு கோணங்களில் சிந்தித்தனர்.   

             ரைட் சகோதரர்கள் தங்கள் முதல் கிளைடரை 1900 ஆம் ஆண்டில் உருவாக்கினர் அதனை எங்கு சோதித்துப் பார்க்கலாம் என்று சிந்தித்தபோது பருவநிலை ஆராய்ட்சி நிலையத்திற்கு கடிதம் எழுதினர். வட கேரனொய்வில் உள்ள கிட்டிகாக் என்ற இடம் உகந்தது என்று பதில் வந்தது. அங்கு சென்று முயன்று பார்த்தனர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அப்போதும் அவர்கள் மனம் தளரவில்லை அடுத்த நான்கு ஆண்டுகள் தங்கள் வடிவமைப்பில் வெவ்வேறு மாற்றங்களை செய்வதும் சோதிப்பதுமாக இருந்தனர் ரைட் சகோதரர்கள். வேறு முன்மாதிரிகள் இல்லாததால் சிந்தித்து சிந்தித்து மாற்றங்கள் செய்தனர். ஒவ்வொரு முறையும் அவர்களால் முன்னேற்றத்தை உணர முடிந்தது. 1903 ஆம் ஆண்டு தாங்கள் தயாரித்த ஒரு கிளைடரில் தாங்களே உருவாக்கிய ஒரு மோட்டார் இயந்திரத்தைப் பொருத்தினர். அதில் விமானி குப்புற படுத்துக்கொண்டே தன் கை, கால்களால் இயக்கி அதனை பறக்கச் செய்ய வேண்டும்.


             1903 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ந்தேதி முதல் வெள்ளோட்டத்திற்கு தயாராக நின்றது ஃப்ளையர் என்று அவர்கள் பெயரிட்டிருந்த அந்த விமானம். யார் அதனை ஓட்டுவது என்று நாணயத்தை சுண்டிப் பார்த்ததில் வில்பருக்கு வெற்றிக் கிடைத்தது. இருவரின் மனமும் எதிர்பார்ப்பில் படபடக்க விமானத்தில் ஏறி குப்புற படுத்துக்கொண்டே விமானத்தைக் கிளப்ப முயன்றார் வில்பர், ஆனால் ஏதோ இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் நகரவே இல்லை. அப்போதுகூட அந்த சகோதரர்கள் மனம் தளர்ந்து போயிருந்தால் நமக்கு விமானம் கிடைக்காமல் போயிருக்கும். அடுத்த மூன்று நாட்கள் சிந்தித்து மேலும் சில மாற்றங்களை செய்தனர். 

             டிசம்பர் 17ந்தேதி மீண்டும் முயன்றனர். இம்முறை நாணயத்தை சுண்டிப்பார்த்ததில் ஆர்விலுக்கு அடித்தது யோகம்.விமானத்தில் வயிறுக் குப்புற படுத்துக்கொண்டு அமெரிக்க நேரப்படி காலை 10:35 க்கு விசையை இழுத்தார் ஆர்வில்.அந்த இயந்திர விமானம் ஆடி குலுங்கி, கனைத்து புகையைக் கக்கியபடியே மெதுவாக மேலே எழத்தொடங்கியது. அந்தரத்தில் அப்படியும் இப்படியுமாக ஆடி சரியாக 12 வினாடிகள் பறந்து 37 மீட்டருக்கு அப்பால் போய் பத்திரமாக தரையிறங்கியது.அந்த 12 வினாடிகள்தான் ஆகாய போக்குவரவுக்கு அடிகோலிய மந்திர வினாடிகள். வெற்றிக் களிப்பில் மிதந்தனர் ரைட் சகோதரர்கள். அவர்கள் பல நாட்கள் சிந்திய வியர்வைக்கு கடைசியில் பலன் கிட்டியது. அதேதினம் மேலும் மூன்று முறை ரைட் சகோதரர்கள் மாறி மாறி பறந்து சோதனைகள் செய்தனர். நான்காவது முறை வில்பர் 57 வினாடிகள் அந்தரத்தில் பறந்தார். அதற்கு அடுத்த ஆண்டே ரைட் சகோதரர்கள் நூறு அடி உயரம்வரை சென்று பன்னிரெண்டு மைல்கள் பறந்து சாதனை படைத்தனர். தொடர்ந்து பல முன்னேற்றங்களை செய்து 1908 ஆம் ஆண்டு 57 நிமிடங்கள் ஆகாயத்தில் பறந்து சாதனை படைத்தார் ஆர்வில்.


        அடுத்த சோதனையின்போது தன்னுடன் ஒரு பயணியை அழைத்துச் சென்றார் ஆனால் எதிர்பாராத விதமாக விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் அது பூமியில் விழுந்து நொறுங்கியது. பயணி மாண்டார் ஆர்வில் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். ஆகாயப் போக்குவரவை சாத்தியமாக்கிய வில்பர் ரைட் 1912 ஆம் ஆண்டு மே மாதம் 30 ந்தேதியும் ஆர்வில் ரைட் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ந்தேதியும் இயற்கை எய்தினர். அந்த சகோதரர்கள் கிட்டிக்காக்கில் வடிவமைத்து உருவாக்கி முதன் முதலில் பயணம் செய்த அந்த விமானம் வாஷிங்டெனில் உள்ள தேசிய வான்வெளி அருங்காட்சியகத்தில் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ரைட் சகோதரர்களின் அடிப்படையைக் கொண்டு பற்பல மாற்றங்களைக் கண்டு நவீன விமானம் உதயமானது. 


 “பயிற்சியும் முயற்சியும் இருந்தால்

ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”






No comments:

Post a Comment

Sci quiz

Science Lesson - 1 ...